திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் 117 பட்டாலியன் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் உள்ளது. இந்த வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு கேண்டீன் இயங்கி வருகிறது.
இந்த கேண்டீயனில் முன்னாள் ராணுவத்தினர் அடையாள அட்டைகளை காட்டி வரி இல்லாத பொருட்களை வாங்கி செல்லலாம். இதனால் பொருட்களின் விலை இங்கு குறைவாக இருக்கும்.
மாதத்தின் தொடக்க நாட்களில் இங்கு பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலை மோதுவது வாடிக்கை. இந்நிலையில் இந்த ராணுவ கேண்டீனில் உள்ள நிர்வாகத்தினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து இன்று முன்னாள் ராணுவத்தினர் கேண்டீன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறும்போது:-
கேன்டீன் மானேஜர் உதவியுடன், ஊழியர்கள் முறைகேடாக திருட்டு ரசீதுகளை போட்டு முன்னாள் ராணுவத்தினருக்கா வரும் பொருட்களை மோசடியாக அவர்கள் எடுத்து சென்று விடுகின்றனர்.
அத்தியாவசியமான முக்கிய விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்காமல் பின்னர் அந்த பொருட்களை வௌிச்சந்தையில் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். சட்டவிரோதமாக செயல்படும் இந்த மேலாளர், துணை மேலாளர், ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தற்போது விடப்பட்டுள்ள கேண்டீன் ஏலத்தை ரத்து செய்து உரிய முறையில் விசாரணை செய்து புதிய ஏலம் நடத்த வேண்டும் என்று அவர்கள் தொிவித்தனர்.
எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ராணுவ குழுமத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி, தேனி, திண்டுக்கல், நாமக்கல் , தஞ்சாவூர், நாகப்பட்டிணம், ஆகிய கேண்டீன்களின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
300க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தினால் திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.