திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் பொது கழிப்பிடம் திறப்பு.
திருச்சி மாநகராட்சி 62வது வார்டுக்கு உட்பட்ட அன்பிலார் நகர் 5வது கிராஸ் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். ஒரு சென்ட் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
2006ல் அப்பகுதி மக்களின் வசதிக்காக ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.
இந்த கழிப்பிடம் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. 7 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சிலரின் எதிர்ப்பு காரணமாக பொதுக்கழிப்பிடம் மூடப்பட்டது.
அப்பகுதி மக்கள் மூடப்பட்ட கழிப்பிடத்தை திறக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போதைய தி.மு.க. கவுன்சிலர் சுபாவின் உதவியை பொதுமக்கள் நாடினர். உடனே அவர் மேயர் மு. அன்பழகனை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து மேயர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மூடப்பட்டிருந்த பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து இன்று போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கழிப்பிடம் மீண்டும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இதில் கவுன்சிலர் சுபா,தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், வார்டு திமுக செயலாளர் ராஜகோபால், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், சமூகநல ஆர்வலர்கள் கமலா ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.