திருவானைக்காவலில் சம்பவம்.
மாமியார் கழுத்தில் சிகரெட்டால் சூடு வைத்த மருமகன்
கைது.
திருச்சி திருவானைக்காவல் முறக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக். (வயது 30).
இவர் திருச்சி திருவானைக்காவல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரது மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கார்த்திக் மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்தார். இந்த நிலையில் அவர் நீண்ட நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி திரிந்தார்.
இதையடுத்து அவரது மனைவி பாண்டிச்சேரிக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வாரம் ஒரு முறை மட்டுமே அவர் திருச்சி வந்து சென்றார்.மனைவி வேலைக்கு செல்வது கார்த்திக்குக்கு பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து அவர் மாமியார் தேவியிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த கார்த்திக், மாமியார் தேவியின் கன்னத்தில் அறைந்து, கட்டையால் அவரை அடித்து உதைத்து விட்டு கையில் வைத்திருந்த சிகரெட்டால் அவரது கழுத்தில் சூடு வைத்து விட்டுத் தப்பிச் சென்றார்.
பாதிக்கப்பட்ட தேவி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.