Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மகா சிவராத்திரி அன்று சதுரகிரி மலையில் சாமி தரிசனத்துக்கு அனுமதி.

0

'- Advertisement -

மகாசிவராத்திரி தினமான மார்ச் 1ஆம் தேதி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய விடிய இரவு முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. பிரதோசம், மகாசிவராத்திரி, மாசி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நான்கு நாட்கள் சதுரகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற சுந்தர- சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை தொழுதால், அனைத்து எண்ணங்களும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும்.

மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் ஏராளமானோர் இந்த ஆலயத்திற்கு வந்து மலையேறி சென்று ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு வருகிற 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி வருகிறது. இதையொட்டி சதுரகிரி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி, பிரதோ‌ஷம், அமாவாசையை முன்னிட்டு வருகிற 28ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 3ஆம் தேதி வியாழக்கிழமை வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரி தினமான 1ஆம் தேதி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய விடிய இரவு முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நான்கு நாட்களில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வேண்டும். பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை. மலையேறும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.