அன்பையும் மனித நேயத்தையும் பற்றி பேசிய சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய நிலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுவன் அப்துல் கலாமுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை தரப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யூட்யூப் தளம் ஒன்றில் வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்று சிறுவன் பேசியிருந்தான். அந்தச் சிறுவனிடம் உனக்கு பிடிக்காதவர்கள் யார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, எல்லாரும் உலகத்துல சமம். நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சிலப்பேருக்கு கஷ்டம் இருக்கும் என்று சொன்னார்.
அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க. யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் என்னை பல்லான்னுதான் கூப்பிடுவாங்க. நான் ஏன் யாரையும் புடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான் என்றும் பேசினார்.
ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம். ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி? இந்தக் கருத்து எல்லோர்கிட்டயும் போய் சேரணும். அப்போதான், மனித நேயம் போய் சேரணும். மனித நேயம் இருக்கணும் என்றார். சமூக வலைத்தளங்களில் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்தன. சிறுவனின் பேச்சு அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, பல யூட்யூப் சேனல்களும் அந்தச் சிறுவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து பேட்டியெடுத்தனர்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அப்துல் கலாம் சிறுவனையும், அவனது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்த சந்திப்பின் போது, சிறுவன் அப்துல் கலாமின் பெற்றோர் தங்களது வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அவர்களது கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவன் அப்துல் கலாமின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அமைச்சர் தா மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார். அதனை தனது ட்விட்டர் பதிவில் தா.மோ அன்பரசன் பதிவிட்டிருந்தார். சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது.
வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய நிலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுவன் அப்துல் கலாமுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை தரப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டதற்கு அப்துல் கலாம் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.