Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரியலூர் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய இந்து முன்னணி வலியுறுத்தல்.

0

 

மாணவி உயிரிழப்புக்கு காரணமான நபர்கள்
மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்.

அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலைக்கு காரணமான, தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன், மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை :

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சு. லாவண்யா என்ற மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் (விடுதியில் தங்கி) பயின்று வந்தார். 10 ஆம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர் என்பதால், பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை உயர் கல்வி பயில வைப்பதாக கூறி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறச்சொல்லி வற்புறுத்தியுள்ளது. அம்மாணவியின் பெற்றோர்களிடமும் பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறது. ஆனால் மாணவியும் பெற்றோரும் மதம் மாற மாட்டோம் என்று மறுத்து கூறவே, மாணவி லாவண்யாவை அந்த பள்ளி நிர்வாகத்தினர் கொடுமைப் படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
நிகழாண்டு 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யாவை படிக்க விடாமல் விடுதியை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, தோட்ட வேலை உள்ளிட்டவைகளை செய்யச்சொல்லியுள்ளனர். மேலும் பள்ளி விடுமுறை நாள்களிலும்கூட வீட்டுக்குச் செல்லவிடாமல் இந்த மாணவியை மட்டும் விடுதியிலேயே தங்கவைத்து இதுபோல வேலைகளை வாங்கி படிக்க விடாமல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் மனம் நொந்து போன மாணவி கடந்த 10 தினங்களுக்கு முன்பு பூச்சி உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து, பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் மாணவியிடமும், பெற்றோருக்கு விவரம் தெரிந்தால், மீண்டும் பள்ளிக்குள் நுழைய முடியாது எனவும் மிரட்டி, சில மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த மாணவிக்கு உடல் நலம் சரியில்லாது போகவே, மருத்துவமனையில் சேர்த்தபோதுதான் மாணவி விஷம் அருந்திய விஷயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி மாணவி உயிரிழந்துள்ளார்.
கல்வி என்ற பெயரில் மதமாற்றம் செய்யும் இதுபோன்ற மதவெறியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கவேண்டும். இதுகுறித்து விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.

மாணவியின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, விடுதி மாணவியரிடம் முழுமையாக விசாரணை செய்தால் மட்டுமே மதமாற்றக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வரும்.ஆகவே அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் வலியுறுத்துகிறோம்.

மேலும் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு இந்து இளைஞர் முன்னணி (ஹெச்.ஒய்.எப்) சார்பாக போராட்டங்கள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.