அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் அதற்கு முன்னோட்டமாக முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16-ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது.
இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது.

விழாக் குழுவினர், கிராமப் பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கால்கோள் நடும் நிகழ்வு நடந்தது.
இதைத்தொடர்ந்து ஜல்லிகட்டு விழாக் குழுவினர்
பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது.
வழக்கம் போலவே இந்த ஆண்டும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16-ம் தேதி தமிழக அரசு அனுமதியுடன் நீதிமன்ற வழிகாட்டுதல் படி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெறும்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் எண்ணிக்கை, மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை தேவைக்கேற்ப அனுமதிக்கப்படும். அதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்கும்அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும்.
மேலும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள், உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்படும். தற்போது அதிக அளவில் பரவி வரும் கரோனா பெருந்தொற்று காரணமாக அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்குக் கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு விழாவை நடத்தத் தயாராக உள்ளோம்.
அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் எந்தவிதமான தொய்வின்றி நடந்து வருகிறது. அரசின் உத்தரவையடுத்து பணிகளைத் தொடங்க ஜல்லிக்கட்டு விழா குழு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.