Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்.தொடரை கைப்பற்றுமா இந்தியா?

0

 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

 

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

‘தென்ஆப்பிரிக்காவின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியனில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்து வரலாற்றை மாற்றி காட்டியது. இதனால் இந்திய வீரர்களின் நம்பிக்கை, உத்வேகம் அதிகரித்துள்ளது. அதே உற்சாகத்துடன் ஜோகன்னஸ்பர்க்கிலும் களம் இறங்குவார்கள்.

செஞ்சூரியன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (123 ரன்), மயங்க் அகர்வால் (60 ரன்) ஆகியோரின் வலுவான அடித்தளம் இந்தியாவின் வெற்றிக்கு அச்சாரமாக இருந்தது.

ஆனால் கேப்டன் விராட் கோலி (35 மற்றும் 18 ரன்) பெரிய அளவில் ரன் குவிக்காதது ஏமாற்றம் அளித்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆண்டுக்கு மேலாக சதம் அடிக்காத விராட் கோலிக்கு அதுவே ஒருவித நெருக்கடியாக உள்ளது. அவர் பெரும்பாலும் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து ஆட்டமிழந்து விடுகிறார். பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப் அல்லது விக்கெட் கீப்பரிடம் கேட்ச்சாகி விடுகிறது. இதில் கோலி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஸ்டம்புக்கு வெளியே சீறும் பந்துகளை தொடாமல் விடுவது நல்லது என்றும் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதே போல் மூத்த வீரர்கள் அஜிங்யா ரஹானே, புஜாரா ஆகியோரும் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும்.

பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மிரட்டுவார்கள். இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் மேலோங்கும்.

ஷர்துல் தாக்குரின் பந்து வீச்சு முதல் டெஸ்டில் எடுபடவில்லை. ஆனாலும் அவரிடம் பேட்டிங் திறமை உள்ளது. அதுவும் வெற்றி கூட்டணியை மாற்ற கேப்டன் கோலி விரும்பமாட்டார். அதனால் ஷர்துல் தாக்குருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கலாம். மொத்தத்தில் இந்த டெஸ்டிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்கும் துடிப்புடன் இந்திய அணியினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.

முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட எட்ட முடியாமல் அடங்கிய தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீள்வதற்கு வரிந்து கட்டும்.

ஆனால் அனுபவ விக்கெட் கீப்பர் 29 வயதான குயின்டான் டி காக் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது அந்த அணிக்கு பேரிடியாகும். ‘டி காக்கின் முடிவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அவர் சொன்ன காரணங்களை புரிந்து கொண்டேன். அவரது ஓய்வு சக வீரர்களின் ஆட்டத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை’ என்று தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் நேற்று தெரிவித்தார்.

வேகப்பந்து வீச்சில் வலுவாக காணப்படும் அந்த அணி பேட்டிங்கில் பலவீனமடைந்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் டீன் எல்கர், பவுமா, மார்க்ராம் உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்காவிட்டால் அவர்களது நிலைமை சிக்கல் தான்.

ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி இதுவரை தோற்றது கிடையாது. அங்கு இந்தியா 5 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. வெளிநாட்டில் இந்தியாவின் ராசியான மைதானம் என்ற முத்திரையை தகர்க்க தென்ஆப்பிரிக்க அணியினர் முயற்சிப்பார்கள் என்பதால் இந்த டெஸ்டிலும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதலில் பேட் செய்யும் அணிக்கு அனுகூலம் அதிகம் என்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

முதலாவது டெஸ்டில் 2-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டிக்கும் மழை ஆபத்து உள்ளது. முதல் நாளில் அங்கு பிற்பகலுக்கு பிறகு மழை குறுக்கிடலாம்.

2-வது நாளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டிக்குரிய 5 நாட்களில் 4 நாள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

Leave A Reply

Your email address will not be published.