இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் டெல்டா வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் தென்பட்டது. இது கவலைக்குரிய திரிபு என அடுத்த 2 நாளில் உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது.
கடந்த மாதம் 2-ந் தேதி இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. அன்றைய தினத்தில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த ஒரு மாத காலத்தில் நாட்டில் 23 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது டெல்டா வைரஸ் இடத்தை ஒமைக்ரான் வைரஸ் பிடிக்கத்தொடங்கி உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார உள்கட்டமைப்பு விரைவில் அழுத்தத்துக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதால் ஆக்சிஜன் கிடைப்பதைக் கண்காணிக்குமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.