ஏ.ஐ.சி.டி.இ அடல் வழங்கும் வாழ்க்கை திறன்கள் மேலாண்மை தொடர்பான ஆசிரிய
மேம்பாட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
ஏ.ஐ.சி.டி.இ அடல் வழங்கும், தேசிய அளவிலான, வாழ்க்கை திறன்
மேலாண்மையில் கவனம் செலுத்தும், ஒரு வார அளவிலான, ஆசிரிய மேம்பாட்டு
நிகழ்ச்சி ‘உங்கள் கையெழுத்து உங்கள் அடையாளம்’ (பிரத்தியேகமாக
பெண்களுக்கு) என்னும் கருப்பொருளில், நிகழ்நிலை வாயிலாக, டிசம்பர் 27
முதல் 31 வரை, தேசிய திருச்சி தொழில்நுட்பக் கழகம்,
(என்.ஐ.டி ) மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறையால்
நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சி டிசம்பர் 27 அன்று வெப் எக்ஸ் மெய்நிகர்
தளத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம்,
திருச்சியின் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறையைச் சேர்ந்த முனைவர்
ஜோசபின்.ஆர்.எல் , முனைவர் வெங்கட கிருத்திகா.எம் , முனைவர் மகேஷ்வரி.எஸ்
ஆகியோரால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
முனைவர் ஜோசபின்.ஆர்.எல் நிகழ்ச்சியில் கூடியிருப்போரை
வரவேற்புரை ஆற்றினார்.
முனைவர் வெங்கட கிருத்திகா இந்த ஆசிரிய மேம்பாட்டு நிகழ்ச்சி
எவ்வாறு திட்டமிடபட்டது என்பதை விளக்கினார்.
எட்டு மாதங்களுக்கும்
முன்னதாகவே இதன் திட்டமிடல் தொடங்கியது என்பதைத் தெரிவித்தார். 36
வயதினிலே திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்டே இந்தக் கருப்பொருள் தேர்வு
செய்யப்பட்டது எனக் கூறித் தொடர்ந்தார்.
இந்த கொரோனா காலமே பல ஒருங்கிணைப்பாளர்களை இந்நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்க
ஊக்குவித்திருக்கிறது எனக் கூறினார். இக்காலம் உலகெங்கும் கடினமாக
இருந்தாலும், குடும்ப மற்றும் பணி சார்ந்த வாழ்க்கைகளுக்கிடையே ஓடுவதால்
பெண் சமுதாயத்திற்கு கூடுதல் கடினமாகவே இருந்தது எனக் கூறி , இத்தகு
நிலையிலிருந்து தமது கடமைகளை உணரவும் , பல உயரங்களை அடைய ஊக்குவித்துப்
பங்களிப்பதற்கான நோக்கத்தோடு தான் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்றார்.
என்.ஐ.டி திருச்சியின் மின் மற்றும் மின்னணுப்
பொறியியல் துறையின் தலைவரான முனைவர் வீ.சங்கரநாராயணன், திருச்சியின் கடந்த காலத்தில் பெண் ஆசிரியர்களின்
சுறுசுறுப்பான பங்களிப்பை பற்றிப் பேசி, இந்நிகழ்ச்சியினை வெற்றிகரமாக
நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களைப் பாராட்டினார்.
திருச்சி என்.ஐ.டி. இயக்குநர் (பொறுப்பு) முனைவர்
ஜி. கண்ணபிரான் தமது தலைமை உரையில், தேசிய தொழில்நுட்பக் கழகம்,
திருச்சியானது பெண்களைக் கல்விப்பணிகளிலும் , நிர்வாகப் பொறுப்புகளிலும்
ஊக்குவிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது எனவும் , சரியான வாய்ப்புகள்
கிடைக்கும் போதெல்லாம் பல தடைகளைத் தாண்டி பெண் ஆசிரியர்கள் வெற்றி
பெற்று வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், தேசிய தொழில்நுட்பக்
கழகங்களில் முதலிடத்தில் இருக்கும் இக்கல்லூரி தொடர்ந்து நிறைய பெண்களை
நிறுவனத்தில் சேரவும் , நிர்வாகப் பொறுப்புகளை எடுக்கவும் ஊக்குவிக்கும்
என்றார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 அமலின் ஒரு பகுதியாக, பாலினத்தினால்
உருவாகும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முன்மொழியப்பட்டுள்ளது எனவும்
தெரிவித்தார்.
இன்டெல் நிறுவனம் பெங்களூரின் முதன்மைப் பொறியாளரான முனைவர் கிருஷ்ண பால் பேசுகையில், ஒருவரின் கற்றல், வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும்
என்றும், வெற்றி தோல்விகளின் இடையிலும் நிலைத்து நிற்கும் தன்மையை
வளர்க்க வேண்டும் எனவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்,
மருத்துவம் ஆகிய துறைகளில் ஒரு பொறியாளர் அல்லது ஆசிரியராகப் பணியாற்றப்
பற்றை வளர்த்துக் கெள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இறுதியில்
அனைவரையும் ஊக்குவிக்கும் பொருட்டு “எனது அறிவே எனது கையெழுத்து” எனக்
கூறினார்.
கருப்பொருளிற்கான விளக்கவுரையில் தேசிய தொழில்நுட்ப ஆசிரிய பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி கழகம்,சென்னையின்(என்.ஐ.டி.டி.டி.ஆர்) இயக்குநர்,
முனைவர் உஷா நடேசன் வாழ்க்கை திறன்கள் மேலாண்மை என்பதற்கும்
கருப்பொருளிற்குமான தொடர்பினை அழகாக விவரித்தார்.
மேலும், வாழ்வில்
வெற்றி பெற, முடிவு எடுக்கும் திறன், படைப்பாற்றல் மிக்க மற்றும்
திறனாய்வு பற்றி சிந்திக்கும் திறன், சிக்கல்களைத் தீர்க்கும் திறன்,
அழுத்தத்தைக் கையாளும் முறை ஆகிய திறன்கள் அவசியம் என்றார். இறுதியில்,
கற்பதற்கான ஆர்வம் சுயமரியாதையுடன் தொடர்ந்து வாழ்வதற்கு முக்கியம் எனத்
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் எண்ணிக்கை 176 எனவும் , அதில் 122
பேர் தொடக்க நிலை உதவிப் பேராசிரியர்கள் எனவும், ஏறத்தாழ 24 பேர் இடைநிலை
மற்றும் மூத்த ஆசிரிய வல்லுநர்கள் மற்றம் ஆராய்ச்சி மாணவர்கள் எனவும்
தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி ஐந்து நாட்களுக்கு 15 அமர்வுகளாக
நடைபெறும். ஒவ்வொரு அமர்வும் 90 நிமிட நீண்ட உரை மற்றும் 30 நிமிட
கலந்துரையாடல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
பெண் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை அவர்கள் இலக்கை நோக்கிய
பயணத்தில் உத்வேகபடுத்தும் நோக்கத்தோடு, வெவ்வேறு துறைகளிலிருந்து பல
வல்லுநர்கள் உரையாற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கல்வியாளர்களாக,
இந்நிகழ்ச்சியின் முதல் அமர்வு இக்கல்லூரியின் முன்னாள் இயக்குநரான
புகழ்பெற்ற கல்வியாளர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்களுடன்
திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பெண் தொழிலதிபர் சில்வியா உரையாற்றுவார்.
என்.ஐ.டி திருச்சியின் பேராசிரியரான முனைவர் பிரேமலதா
ஆராய்ச்சித் துறையில் பெண்கள் என்பதில் கவனம் செலுத்துவார். சிஸ்கோ
நிறுவனத்திலிருந்து கலைச்செல்வி வணிகத்துறையில்
பெண்களின் பங்களிப்பை விளக்குவார்.
ஸ்வீடனிலிருந்து விமல்
சுஹன்யா ஒருவருடன் ஒருவர் இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசுவார்.
கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செல்வி ரேஜி பெண்களுக்கான
அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றி உரையாற்றுவார். சர்வதேச
துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை ஷரண்யா தொழில் வாழ்க்கை
சமநிலை குறித்து உரையாற்றுவார். மருத்துவர் அகான்க்ஷா சிங் உடல் நலன்
குறித்து பேசுவார். மருத்துவர் மீனா ராமநாதன் யோகாவின் மூலம் சமநிலையைக்
கொண்ட சுயமரியாதை அடைவதற்கான பயிற்சியளிப்பார்.
மற்றொரு கேரள உயர்
நீதிமன்ற வழக்கறிஞர் டி குரூஸ் பெண்கள் மற்றும் அரசியலமைப்பு
பற்றிப் பேசுவார். மருத்துவர் திவ்யா சுகுமார் மற்றும் இந்திய விமான
படையைச் சேர்ந்த பாரதி அவர்களும் மனநலம் பற்றிய அமர்வை நடத்துவார்கள்.
நாட்டினைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்களிப்பு பற்றி யாமினி
உரையாற்றுவார். அவரைத் தொடர்ந்து பிரேமலதா மிஷ்ரா ,
ஒருவரையொருவர் உயர்த்துவதற்கான தேவை குறித்து விவரிப்பார்.
இத்தொடக்க விழா முனைவர் எஸ்.மகேஷ்வரி நன்றியுரையோடு நிறைவு பெற்றது.