திருச்சி தில்லை நகரில் இன்று பரிதாபம்:
தனியார் வங்கி அதிகாரி மனைவி தூக்குப் போட்டு சாவு.
சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்.
திருச்சி தில்லை நகரில் இன்று தனியார் வங்கி அதிகாரியின் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் காமராஜ். ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி. இவருக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர்.
இரண்டாவது மகள் சினேகா. ( வயது 26). இவர் எம்.எஸ்சி. பட்டதாரி. கடந்த 2 மாதமாக காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி யைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி ஒருவருக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது .
இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது தந்தை வீட்டில் தங்கி கடந்த 2 மாதமாக சினேகா வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் அவரது அறை திறக்கப்படவில்லை.
பின் சினேகா வீட்டு மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனே இது குறித்து தில்லை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ,பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சினேகாவின் பெற்றோர் தில்லை நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளனர் அந்த புகாரில், எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இச் சம்பவத்திற்கு காரணமான எனது மகள் சினேகாவின் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் இன்று காலை நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.