Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீட் தேர்வில் தோல்வி.கூடலூர் அரசு பள்ளி மாணவி தற்கொலை.

0

கூடலூர் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் அருளானந்தன். இவரது 2- வது மகள் ஜெயா (வயது 18). இவர் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்- 2 படித்தார். இந்த நிலையில் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஜெயா படித்த அவர் நீட் தேர்வும் எழுதினார்.

கடந்த மாதம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில் மாணவி ஜெயா 69 மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இதனால் மன வருத்தத்துடன் அவர் இருந்தார். இதையறிந்த பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சில வாரங்கள் இருந்த ஜெயா, தனது பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு கடந்த 13-ந் தேதி பாரதி நகருக்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நியூ ஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த ஜெயா, தான் எப்படியும் டாக்டராகிவிடுவேன் என்று நினைத்து ஸ்டெதஸ் கோப் போட்டுவிட்டு புகைப்படங்கள் எல்லாம் எடுத்து உள்ளார்.

இருந்தபோதிலும் அவர் நீட்தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது.

அத்துடன் மாணவி ஜெயா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த உருக்கமான கடிதத்தில் ஜெயா கூறியிருப்பதாவது:-

அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நீட்தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். இருப்பினும் உங்களை பார்த்தபோது எனது முடிவு மாறியது.

எனவே நான் பாராமெடிக்கல் பிரிவு படிக்க முடிவு செய்து அதற்கு விண்ணப்பித்தேன். ஆனால் திருப்பூர் சென்ற பிறகும் எனது மனம் கஷ்டமாக இருந்தது. எனவேதான் நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன். அம்மா… நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

நான் எடுத்து உள்ள முடிவு உங்களுக்கு கஷ்டமாகதான் இருக்க வேண்டும். இது எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் தெரிந்தே நான் இருந்த முடிவை எடுத்து உள்ளேன். எனவே அம்மா… என்னை மீண்டும் மன்னித்துவிடு.
இவ்வாறு ஜெயா அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி உள்ளார்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட்தேர்வு தோல்வியால் ஜெயா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.