Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்.போராட்டம் வெற்றிபெற துரைமுருகன் வாழ்த்து.

0

இன்று முதல் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து அரசு வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள இருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்குகிறது.

இந்த போராட்டத்திற்கு
திமுக முழு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வங்கி ஊழியர் சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
வங்கிகளை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தை தவிர்க்க கூடுதல் தலைமைத் தொழிலாளா் நல ஆணையா், ஊழியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் வங்கிகள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்தால் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிப்பதாக ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.

ஆனால் அவ்வாறு உறுதியளிக்க மத்திய அரசு மறுத்து விட்டதால், இன்றும், நாளையும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் 9 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால் காசோலை, ஏடிஎம் உள்ளிட்ட வங்கிப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனியார் மயத்தைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் நடத்தும் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.