Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

0

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. பரமபத வாசலை கடந்து நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இதில் மார்கழி மாதம் 20 நாட்கள் திருவத்யயன உற்சவம் என்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடக்கும். இந்த விழா நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பகல் பத்து, இராப்பத்து என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது. பகல் பத்து நாட்களில் பெருமாள் முன் அரையர்கள் தீந்தமிழ் திருமொழிப் பாசுரங்களைப் அபிநயத்தோது பாடுவார்கள்.

இராபத்து துவக்க நாளின் அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவர் ஆயிரங்கால் மண்டபம் வருவார். அங்கு 10 நாட்கள் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாடப்படும். பகல் பத்து திருநாள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்று முதல் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு, கோயில் அர்ஜுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து திருமொழிப் பாசுரங்களைக் கேட்டு வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (13ம் தேதி) ஸ்ரீ நம்பெருமாள் மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான இன்று பரமபத வாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு, காலை 4.44 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியே அடியார் திருக்கூட்டம் புடை சூழ பரமபத வாசலை கடந்து நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பரமபத வாசல் திறப்பின் காலை 4.44மணிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ளதால் இந்த ஆண்டும் பெருமாள் புறப்பாட்டின் போது பணியாளர்கள் தவிர பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும் பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து ஆஸ்தானம் சேர்ந்த பின் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுந்த ஏகாதசி விழா ஏற்பாடுகளை அரங்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரியும்., இணை ஆணையருமான மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள் உட்பட பலர் செய்து வருகிறார்கள்.

ஸ்ரீரங்கத்தில் இவ்வருடம் தை பிரம்மோற்சவம் நடைபெறும் என்பதால் சொர்க்க வாசல் திறப்பு முன்கூட்டியே கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடைபெறுவது வழக்கமாகும்.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சொர்க்க வாசல் திறப்பு அன்று, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இன்று, திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.