அரியாற்றங்கரையை பலப்படுத்த வேண்டும்
பா ஜ க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
மழை வெள்ளம் பாதிக்காத வகையில் அரியாற்றங்கரையை விரைவில் பலப்படுத்த வேண்டும் என பா ஜ க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜ க மாவட்ட செயற்குழு கூட்டம் சீராத்தோப்பு பாரத பண்பாட்டு கல்லூரியில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டிமுத்து வரவேற்றார். மாநில செயலாளர் பார்வதி, திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் லோகிதாஸ், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் இல.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொது செயலாளர் ராம. சீனிவாசன், பட்டியல் அணி மாநில தலைவர் பொன்.பாலகணபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்ட அறிக்கையை மாவட்ட பொது செயலாளர் சங்கர் பெருமாள் வாசித்தார். மாவட்ட துணை தலைவர் இந்திரன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியாற்றில் கனமழை காரணமாக கரை உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் நுழைவதால் வேளாண் பயிர்கள் பாதிப்பதுடன், குடியிருப்புகளிலும் வெள்ளம் சூழ்கிறது எனவே,
அரியாற்று கரையை பலப்படுத்தி தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தீரன்நகர், பிராட்டியூர், கருமண்டபம், கொத்தமங்கலம், கீழ மற்றும் மேல பாண்டமங்கலம், வெக்காளியம்மன் கோவில் அருகில் உள்ள தியாகராஜநகர், லிங்கநகர், பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ .5 ஆயிரம் வழங்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை மறுசீரமைக்கவும், இடிந்த வீடுகளை உடனடியாக கட்டி தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் , டீசல் மீதான மாநில அரசு வரியை குறைக்க வேண்டும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்.
மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாகாமல் தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீரை சேமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் பரமசிவம், சதீஷ், பரஞ்ஜோதி, இளங்கோ மற்றும் பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்தநல்லூர் மண்டல் தலைவர் அழகர்சாமி நன்றி கூறினார.