கட்டுக்கட்டாக ஒரு கோடி ரூபாய் பணத்துடன் சுற்றித்திரிந்த இளைஞர். கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தாவில் 2000 ரூபாய் நோட்டுகளாக,ரூ.1 கோடி ரூபாய் பணத்துடன் சுற்றித்திரிந்த 27 வயது இளைஞரை சிறப்பு அதிரடிப்படை போலிஸார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாநகராட்சிக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பார்க் தெருவில் ஒரு பையுடன் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு சென்று நடத்திய சோதனையில், பிரிதம் கோஷ் (வயது 27) என்பவரை கைது செய்து அவர் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக வைத்திருந்த ரூ.1 கோடி ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து போலிஸார் பிரிதம் கோஷுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட பிரிதம் கோஷ், தேர்தல் பணப்பட்டுவாடாவிற்காக பணம் பெற்றாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.