திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற
8 ஆவது மெகா முகாமில் 72,601 பேருக்கு தடுப்பூசி.
மாவட்ட ஆட்சியர் தகவல்.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமில், 72,601 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒட்டி நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப நகர்புற, ஊரக சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகளில் தினசரி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும்,
சிறப்பு முகாம்கள் மூலமும் தடுப்பூசிகள் செலுத்ப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரையில் மொத்தம் 8 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்மூலம் நகர்புறங்களில் 200, ஊரகப் பகுதிகளில் 336 என மொத்தம் 536 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இவற்றில் காலை 7 முதல் இரவு 7 மணிவரை கோவாக்சின் 8,911, கோவிஷீல்டு 63,690 என மொத்தம் 72,601 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சிறப்பு முகாம்கள் மூலம் அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தியமைக்காக சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் ஆட்சியர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.