பாவூர்சத்திரத்தை சேர்ந்த வாலிபர் கடத்தலா? போலீசார் தீவிர விசாரணை
பாவூர்சத்திரத்தை சேர்ந்த வாலிபர் கடத்தலா? போலீசார் தீவிர விசாரணை
பாவூர்சத்திரத்தில் வாலிபர் கடத்தல்?
பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகன் ஜெகதீஷ் (வயது 23). இவர் படித்து முடித்துவிட்டு தனது தந்தையுடன் பூ கட்டும் தொழிலுக்கு உதவியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5-ந்தேதி வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற ஜெகதீஷ் அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெகதீஷ் குறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், ஜெகதீசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாகி உள்ளனர். கடந்த வாரம் சிவகாமி புரத்தில் நடந்த பெரிய அம்மன் கோவில் கொடை விழாவிற்கு ஜெகதீஷ் நண்பரான தூத்துக்குடி வாலிபரும் வந்துள்ளார். 5-ந்தேதி இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னர்தான் ஜெகதீசை காணவில்லை.
இதனால் அந்த தூத்துக்குடி வாலிபர் தான் ஜெகதீசை கடத்தி சென்றாரா? அல்லது ஜெகதீஷ் எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.