டி.20 உலகக் கோப்பை முதல் போட்டியில் ஒமன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
டி.20 உலகக் கோப்பை முதல் போட்டியில் ஒமன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இன்று நடந்த முதல் ஆட்டத்தில், ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன்- பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஓமன் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் அந்த அணி தடுமாறினாலும் பின்னர் கேப்டன் ஆசாத் வாலா, 56 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். சார்லஸ் அமினி 37 ரன்கள் எடுத்தார்.
கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்ததால் பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர் முடிவில் , 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்தது. ஓமன் தரப்பில் சீஷன் மக்சூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணியின் துவக்க வீரர்கள் அகிப் இல்யாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோர் அதிரடியாக ஆடி பப்புவா நியூ கினியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
துவக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல், 38 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றனர்
ஜதிந்தர் சிங், 42 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார். அகிப் இல்யாஸ், 43 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 50 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் ஓமன் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
4 விக்கெட்கள் வீழ்த்திய ஓமன் அணியை சேர்ந்த சீஷன் மக்சூத் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.