அரசு வழங்கிய பத்தாயிரத்தை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கிய நல்லாசிரியர். பொதுமக்கள் பாராட்டு.
அரசு வழங்கிய பத்தாயிரத்தை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கிய நல்லாசிரியர். பொதுமக்கள் பாராட்டு.
நல்லாசிரியர் விருதுக்கு தமிழக அரசு வழங்கிய பத்தாயிரத்தை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கிய நல்லாசிரியர் ஷோபாவுக்கு பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரியும் சி.ஷோபாவுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கியதையொட்டி அவருக்கு கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள்
சார்பில் பாராட்டு விழா புதுக்கோட்டை விஜய் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சோ. சுப்பையா, தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில்
கௌரவ விருந்தினர்களாக புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பெ.நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ரவி பல்லவராயர் ,மாமன்னர் கல்லூரியின் ஆங்கில துறை பேராசிரியர் அய்யாவு , புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் நா. செல்லதுரை,புதுக்கோட்டை விஜய் கல்வி நிறுவங்களின் முதல்வர் மற்றும் முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
விழாவில் மீனம்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, மழையூர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.எம் ரங்கசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதி பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் க.சதாசிவம் , மாநில செயற்குழு உறுப்பினர் அ.மணவாளன், அறந்தாங்கி ஜீனியர் ரெட்கிராஸ் கன்வீனர் பூ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுபெற்ற ஷோபாவை கௌரவித்து வாழ்த்திப் பேசினார்கள்.
முன்னதாக ஆசிரியர் சூ.ஜோசப் கென்னடி விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார் .
விழாவில் கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வினை தட்டாம் அணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் தொகுத்து வழங்கினார்.
முடிவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஷோபா அவர்கள் தமிழக அரசு அவருக்கு அளித்த பரிசு தொகை ரூபாய் 10 ஆயிரத்தினை மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்றுவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் 5 பேருக்கு தலா 2000 ரூபாய் என பிரித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் முன்னிலையில் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியிடம் பத்தாயிரத்தை கொடுத்தார்.
இவ்வாறு தனக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக அரசு தனக்கு வழங்கிய பத்தாயிரத்தை தான் பணிபுரியும் பள்ளியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் 5 பேருக்கு தலா 2 ஆயிரம் வீதம் வழங்கிய நல்லாசிரியர் ஷோபாவை பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.