Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க திமுகவினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளை.

0

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பலமுறை கண்டித்தும் தொடர்வது வருத்தமளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேதனை.

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது.

விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திமுகவினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன்.

13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணை நிற்கிறேன்.

இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.