Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா அசத்தல்.தங்கம் வெல்ல வாய்ப்பு

0

டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் மிக சிறப்பாக ஆடி இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் 2020 போட்டிகள் தற்போது டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா இதுவரை தடகளத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தவில்லை. ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் இதுவரை இந்தியா ஏமாற்றமே அளித்துள்ளது.

தடகள போட்டிகளில் இந்தியா இதுவரை பதக்கம் எதையும் இந்த ஒலிம்பிக் போட்டியில் வாங்கவில்லை.

இதனால் இன்று நடந்த ஈட்டி எறிதல் ஆண்கள் தகுதி சுற்று போட்டி அதிக கவனம் பெற்றது.

ஏனென்றால் இன்று நடந்த ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பாக நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இந்தியாவின் மிக சிறந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராதான்.

இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும் வாய்ப்பு கொண்ட வீரர் என்று போற்றப்படுபவர். அதோடு மிக முக்கியமாக நீரஜ் சோப்ரா உலகின் 16வது ரேங்க் கொண்ட வீரர்.

ஈட்டி எறிதல்
ஈட்டி எறிதல் போட்டிகளில் பல்வேறு தனிப்பட்ட சாதனைகளை படைத்து இருக்கிறார். ஈட்டி எறிதல் போட்டிகளில் தனிப்பட்ட வகையில் உலகிலேயே முக்கியமான வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா மதிக்கப்படுகிறார். இந்த நிலையில் இன்று ஈட்டி எறிதல் ஆட்டங்கள் இரண்டு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் முதல் குழுவில் நீரஜ் சோப்ரா இடம்பெற்று இருந்தார்.

இதே குழுவில் ஜெர்மனியின் ஜோஷன்ஸ் வெட்டர் இடம்பெற்று இருந்தார். உலகின் நம்பர் 1 வீரர் இவர்தான். எப்போதும் வெட்டருக்கும் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கும் கடும் போட்டி இருக்கும். இவர்கள் இருவரும் ஈட்டி எறிதல் உலகில் எலியும் பூனையுமாக போட்டியிட கூடிய வீரர்கள். இதனால் இன்று இவர்களுக்கு இடையிலான ஆட்டம் அதிக கவனம் பெற்றது.

இந்த நிலையில் இன்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் 83.50மீ தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். யாருமே 83.50மீ தூரம் எட்டி எறியவில்லை என்றால் நேரடியாக முதல் 12 வீரர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இதனால் எப்படியாவது முதல் 12 இடங்களுக்குள் பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏற்கனவே தனிப்பட்ட வகையில் 88 மீட்டர் தூரத்திற்கு கூட நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்து இருக்கிறார்.

இதனால் இன்று கண்டிப்பாக எளிதாக நீரஜ் பைனல் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் மிக எளிதாக முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா பைனல் சென்றார். முதல்முறை ஈட்டி எறிந்து அதை 86.65 மீட்டர் தூரத்தில் வீசினார். இதனால் எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவரின் குழுவில் நீரஜ்தான் முதலிடம் பிடித்தார்.

இவரின் பரம வைரியான ஜெர்மனியின் வெட்டர் இரண்டாம் இடம் பிடித்தார். உலகின் நம்பர் 1 வீரரான இவர் குழு ஆட்டத்தில் 85.64மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதனால் இவரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஈட்டி எறிதலில் இந்தியாவிற்காக பதக்கம் வாங்கி கொடுக்க்க நீராஜ் சோப்ராவிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. சர்வதேச போட்டிகளில் இவர் எப்போதும் சிறப்பாக ஆடி இருக்கிறார்.

 

தனது வாழ்நாளில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் இவர் தங்கம் வாங்கி உள்ளார். மொத்தமாக இதுவரை 5 முறை இவர் தங்கம் வாங்கி உள்ளார். ஆசிய போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், தெற்கு ஆசிய போட்டிகள், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகிய போட்டிகளில் இவர் தங்கம் வாங்கி உள்ளார். இத்தனை சாதனைகளையும் வெறும் 23 வயதில் நீரஜ் சோப்ரா செய்துள்ளார்.

புல் பார்மில் உள்ளார் நீரஜ் சோப்ரா. இதனால் இந்த முறை கண்டிப்பாக இவர் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஒலிம்பிக்கில் இந்த முறை இதுவரை இந்தியா தங்கம் வாங்கவில்லை. நீரஜ் சோப்ரா இந்த குறையை ஈட்டி எறிதலில் நிறைவு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.