சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் வருவதற்கு தடை விதித்து விருதுநகர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :-
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,
தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படைகளிலும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நோய் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 9ம் தேதி முடிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
கோவிலில் வழக்கம் போல் பூசாரிகள் மூலம் பூஜைகள் நடைபெறும். எனவே, பொதுமக்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கும் வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.