இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் (வயது 87). காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வந்த அவர் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் நீடித்து வந்த அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.
இதில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடலுக்கு எம்பால்மிங் செய்யும் நடைமுறைகள் நடந்து வருகின்றன.
இதன்பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.
இதுபற்றி சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ஜனக் ராஜ் கூறும்போது, கடந்த ஏப்ரல் 30ந்தேதி எங்களுடைய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் காலமானார் என கூறியுள்ளார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பின்பு அதில் இருந்து குணமடைந்து உள்ளார்.
எனினும், அதன்பின்பு நிம்மோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு நீரிழிவு மற்றும் பிற சுகாதார குறைபாடுகளும் இருந்துள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன் சுவாச கோளாறு ஏற்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார் என மருத்துவர் ஜனக் ராஜ் கூறியுள்ளார்.