எடமலைப்பட்டிபுதூரில்
மாசடைந்த குடிநீர்
பொதுமக்கள் அவதி.
திருச்சி மாநகரில் கடந்த பல நாள்களாக மாசடைந்த குடிநீர் வருவதையடுத்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சி பொன்மலைக்கோட்டம் 40வது வார்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கடந்த பல நாள்களாகவே மாசடந்த குடிநீர் வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் குழாயில் எங்கேயோ உடைப்பு ஏற்பட்டு, அதில் மாசு கலப்பதால், பொதுக்குழாய்கள், மற்றும் வீடுகளுக்கு இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் அனைத்திலுமே கலங்கலான குடிநீர் வருகிறதாம். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், முறையான நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
குறிப்பாக நாயக்கர் தெரு பகுதியில் கலங்கலாக குடிநீர் வருவதால்
அப்பகுதியினர் குடிநீரை விலைக்கு வாங்கியும், அல்லது வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படும் குடிநீரையும் பயன்படுத்தி வருகின்றனராம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இதேபோல கலங்கலாக குடிநீர் வந்தது குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில்,
குடிநீர் குழாய் உடைப்பு கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டதாம். தற்போது மீண்டும் கலங்கலான குடிநீர் வருவதால் நிரந்தரமாக சரிசெய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
குடிநீர் கேன்களும் முன்பிருந்ததை விட ரூ.10 அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் குடிநீருக்கென கடந்த பல வாரங்களாக பிரத்யேகமாக தொகை ஒதுக்கப்படவேண்டியுள்ளது எனவும் எடமலைப்பட்டிபுதூர் பகுதி வருத்தமாக கூறியுள்ளனர்