Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புதிய ரேஷன் கார்டுக்கான அளிக்கும் பணி இன்று முதல் தொடக்கம்.

0

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையில், ‘ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாட்களில் கார்டு வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு இடம் பெற்றது.

இதையடுத்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆர்வத்துடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கினர்.

தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்ததால் இப்பணி தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 1-ந்தேதி (இன்று) முதல் புதிய ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் வழங்கும் பணி தொடங்க உள்ளது.

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் வருகிற 31-ந்தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நாட்டில் உள்ள ஒருவர் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் கைவிரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கி கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகம் இருந்த சூழலால் கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையிலும், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை, விலையில்லா மளிகை பொருட்கள் வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியதையடுத்தும் மீண்டும் கைரேகை பதிவு முறை தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4 ஆயிரம் இரு தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. ஜூன் மாதத்தில் நிவாரணத்தொகையுடன் 14 மளிகைப்பொருட்கள் வழங்கவும் ஆணையிடப்பட்டது.

இதனைப்பெற ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத்தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்டு கார்டு) கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப்பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிவாரண உதவித்தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக வினியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால் 1-ந்தேதி (இன்று) முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.