சேறும் சகதியுமாக உள்ள சாலைகள், இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ விடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுமக்கள் வருத்தம்.
திருச்சி மாநகராட்சியில் :
புதைவடிகால் திட்டப்பணியின் போது
பழுதடைந்த சாலைகள் செப்பனிடப்படுமா?
வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் உள்ளன.
திருச்சியில்
புதைவடிகால் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மாநகரில் பல்வேறு பகுதிகளில் சீரமைக்கப்படாமல் உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத வகையில் மோசமடைந்துள்ளன.
மேலும் மழை நீர் தேங்குவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சுகாதாரமற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் 2 ஆம் கட்டமாக கடந்த 2017 ஆம் ஆண்டு புதைவடிகால் திட்டப்பணிகள் தொடங்கின. என்றாலும், உள்ளாட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாத காரணத்தால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.
அலுவலர்கள் முன்னிலையில் பணிகள் நடைபெறுவதை அடுத்து திடீர் திடீரென பணிகள் நடைபெறுவதும், பின்னர் பணிகளில் தொய்வு ஏற்படுவதும் தொடர்ந்து வருகின்றது.
இதற்கிடையே கொரோனா பொதுமுடக்கம் மொத்தப் பணிகளையும் முடக்கியதால், பல்வேறு பகுதிகளில் பணிகள் தொடங்கப்படாமலேயே இருந்து வந்தன.
அதனையடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் வந்ததால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மேலும் பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டது. இத்தனை இடர்களையும் தாண்டி, புதைவடிகால் பணிகள் கிடப்பில் போடப்பட்ட பகுதிகளில் திட்டப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னரும் பணிகளில் வேகமில்லை. இதனால் புதை வடிகால்களுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மிகவும் மோசமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சீர்கெட்டுள்ளது.
திருச்சி, விமான நிலையம், கே கே நகர், ஐயப்பநகர், திருவெறும்பூரில் அரியமங்கலம், காட்டூர் உள்ளிட்ட பல்வறு பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளன. இதில் அவ்வப்போது கோடை மழை பெய்வதால் சாலைகள் மேலும் மோசமாகி சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
திருச்சி மாநகராட்சியில் கே. கே. நகர், 38 ஆவது வார்டு ஐயப்பநகர் பகுதியில் தாயுமானவர் சுவாமி கோயில் தெருவில், சாலையிலிருந்த பள்ளம் ஒன்றில் கார் சிக்கிக்கொண்டது. மேலும் அப்பகுதியில் கழிவு நீர் வாய்க்காலிலிருந்து கழிவு நீர் வழிந்தோடுவதால் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல விமான நிலையம், 35 ஆவது வார்டு பகுதியில் அந்தோணியார் கோயில் தெரு, எல்ஐசி காலனி ஐயர் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகள் மோசமாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே குளம்போல மழை நீர் தேங்கியுள்ளன. விமான நிலையம் பீளிக்கான் கோயில் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள், அம்பிகை நகர், லூர்து நகர், பாரதி நகர், உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகள் மோசமாகவே காணப்படுகின்றன.
குறிப்பு :இப்பகுதி திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வருகின்றன.
இதில் உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள இனிகோ இருதயராஜ் இப்பகுதியில் அண்மையில் தொகுதி நிலவரம் குறித்து அறிய மேற்கொண்ட சோதனையில், மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. உடன் அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
மேலும் தமிழ நகர்புள வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, சாக்கடை தூர்வாரும் பணிகளை மாநகர் முழுவதும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்பகுதியில் சாக்கடைகள் தூர்வாரப்படாமலும், புதைவடிகால் திட்டப்பணிகள் முற்றுப்பெறாமலும், சாலைகள் செப்பனிடப்படாமலும் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.