சுவையான ரவா கேசரி :
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
சர்க்கரை – ரெண்டு கப்
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 3 கப்
முந்திரி – 25 gms
திராட்சை – 25 gms
கேசரி கலர் – 1 சிட்டிகை (optional)
சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – 1/2 கப்
செய்முறை:
ஒரு அடிகனமான வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ரவையை நிறம் மாறாமல் நான்கு நிமிடங்களுக்கு வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
முந்திரி திராட்சையை தனியாக நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து சூடானதும் கேசரி கலர்சேர்த்து கொதிக்க விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து சிறிது சிறிதாக ரவையை சேர்த்தவாறே கைவிடாமல் கிளறவும். ரவை வெந்ததும் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
சர்க்கரை கரைந்ததும் கால் கப் நெய் சேர்த்து மூடிபோட்டு ஐந்து நிமிடங்களுக்கு வேக விடவும்.
நடுநடுவே திறந்து பார்த்து கிளறிவிட்டு கொள்ளுங்கள்.
கேசரியில் இருந்து நெய் பிரிய ஆரம்பித்ததும் மீதமுள்ள நெய்யையும் 2 ஸ்பூன் சமையல் எண்ணெயையும் சேர்த்து கிளறவும்.
பின் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையும் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையையும் சேர்த்து இறக்கினால் சுவையான கேசரி தயார்.
*கேசரி எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகைதான். ஆனால் அதை செய்வதற்கு பொறுமை அதிகம் தேவை.
கேசரி செய்ய ஆரம்பிப்பதில் இருந்து முடியும்வரை அடுப்பை சிம்மில் வைத்தே சமைக்க வேண்டும்.
* நீங்கள் உபயோகிப்பது வறுத்த ரவையே ஆனாலும் மீண்டும் ஒரு முறை வறுக்க வேண்டும்.
உள்நாக்கு வரை தித்திக்கும் இனிப்புச்சுவை தேவையென்றால் மட்டுமே மேற்கூறிய சர்க்கரை அளவு எடுத்துக் கொள்ளவும். மிதமான இனிப்புச்சுவை தேவைப்படுபவர்கள் ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவு சர்க்கரை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.
*பொதுவாக சமையலில் செயற்கை நிறமூட்டிகளைச் சேர்ப்பதில்லை என்பவர்கள் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கேசரி செய்வது வழக்கம்.
கிடைக்காதவர்கள் தண்ணீர் கொதிக்கும்போது அதில் கால்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு பின் ரவையை சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள்தூள் வாசனை அதிகம் தெரியாது.
கேசரி கெட்டியாகாமல் இருப்பதற்காகவே 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் கேசரியில் சேர்க்கப்படுகிறது.
உங்கள் விருப்பம் போல் வீட்டில் இருக்கும் சன்பிளவர் ஆயில் எதுவானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
* கின்ணத்தில் கேசரியை வைத்து பரிமாறும்போது கிண்ணத்தின் ஓரங்களில் நெய் நிற்கவேண்டும்.
ஸ்பூனில் எடுத்தால் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் விசு சொல்வது போல கேசரியில் இருந்து நெய் சொட்ட வேண்டும். இல்லையென்றால் அது இனிப்பு ரவை உப்புமா தான் .