முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
அதன்பின்னர் நரேந்திர மோடிக்கு, மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு நரேந்திர மோடியும் அவருக்கு பொன்னாடை அணிவித்து, தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினும் அப்போது அவருக்கு நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர்.
அதன்பின்னர் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.
நரேந்திர மோடி- மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஏறத்தாழ 30 நிமிடங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேச உள்ளார்