Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்

0

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன் பெறுகிறது.

தமிழகத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு தண்ணீரை அளிப்பதில் மேட்டூர் அணையின் பங்கு மிக முக்கியமானதாகும்.

இந்த ஆண்டு இன்று காலை 10.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

பின்னர் அவர் தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்கிறார். இதற்காக அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்றார்.

காமலாபுரம் விமான நிலையத்தில் அவரை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

சேலத்தில் இருந்து இன்று காலை மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி நடப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 581 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.