உலகநாதபுரத்தில் கழிவுநீர் } குடிநீர் கலப்பு,
திருச்சி கிழக்கு எம் எல் ஏ ஆய்வு செய்து நடவடிக்கை
திருச்சியில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பது குறித்த தகலவறிந்து, திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உலகநாதபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார்.
திருச்சி மாநகராட்சி, பொன்மலைக்கோட்டம், 34 ஆவது வார்டு உலகநாதபுரம் பகுதியில், மாநகராட்சி சார்பில் கடந்த சில நாள்களாக கழிவுநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
பணிகளின்போது இப்பகுதியில் செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் குழாயில் கழிவுநீர் கலந்து குடிநீர் மாசுபட்டதை அடுத்து, மாநகராட்சியினர், புதிய குடிநீர் குழாய்களை பதித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் இன்னும் இணைப்பு ஏற்படுத்தாததால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அருகிலுள்ள கல்லுக்குழி, என்எம்கே காலனி, செங்குளம் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பிலும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
எனவே விரைந்து குடிநீர் குழாயில் இணைப்பை ஏற்படுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனை அறிந்த திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், உலகநாதபுரத்துக்கு சென்று, மாநகராட்சி மேற்கொண்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்திய அவர், புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் இணைப்பை ஏற்படுத்தி விரைந்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்வின்போது, கே கே நகர் பகுதி திமுக பொறுப்பாளர் பாலமுருகன், 34 வது வார்டு செயலாளர் நாகவேணி மாரிமுத்து, மாநகர செயற்குழு உறுப்பினர் ரஜினி சரவணன், திருச்சி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கேபிள் கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.