Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா பணியில் ஈடுபடும் டாக்டர்,நர்ஸ் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை. தமிழக அரசு அரசாணை வெளியீடு.

0

கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்றின் 2-வது அலை தமிழகத்தில் தீவிரமடைந்த நிலையில், டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையில் காய்ச்சல் முகாம் மற்றும் நோய்த்தடுப்பு பிரிவில் பணியாற்றும் பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் நேரடியாக நோயாளிகளுடன் தொடர் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையிலும், ஊக்கம் அளிக்கும்வகையிலும், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் கொரோனா தொடர்புடைய பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும்

காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றிவரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றிவரும் டாக்டர்கள், நர்சுகள், தூய்மைப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி.ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள், கவனிப்பு மையம், கொரோனா நல மையம், நோய் கட்டுப்பாட்டுப் பகுதி, காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மாதிரி சேகரிப்பு மையங்கள், ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகம் உள்ளிட்ட மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொற்று காலகட்டத்தில் நேரடியாக நோயாளிகளுடன் பணியாற்றி வருபவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிதித் தொகுப்பு வழங்க துறை இயக்குனர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

அதன்படி ஆங்கில முறை டாக்டர்கள் மற்றும் இந்திய முறை டாக்டர்களுக்கு (ஆயுஷ்) ரூ.30 ஆயிரமும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், பயிற்சி டாக்டர்களுக்கு ரூ.15 ஆயிரமும், நர்சுகளுக்கு ரூ.20 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

கிராம மற்றும் பகுதி சுகாதார நர்சுகள், 108 ஆம்புலன்சு பணியாளர்கள், 104 அமரர் ஊர்தி பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

புற ஆதார முறையில் பணியமர்த்தப்பட்டோர் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களுக்கும் ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.