Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறு,குறு வியாபாரிகள் காலை 10 மணிவரை வணிகம் செய்ய அனுமதிக்க பால் முகவர்கள் நல சங்கத்தினர் வலியுறுத்தல்

0

தளர்வுகளற்ற ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தளர்வுகளற்ற ஊரடங்கில் சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் காலை 10மணி வரை கட்டுப்பாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கொரோனா நோய் பெருந்தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமுல்படுத்தப்பட்டும் நோய் பரவல் குறையாத காரணத்தால் படிப்படியாக ஊரடங்கை அதிகப்படுத்தி வந்த நிலையில் தற்போது தளர்வுகளற்ற ஊரடங்கினை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்துள்ள தமிழக அரசு சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் அவர்களை சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் என தேசத்தின் பொருளாதாரத்தை தாங்கி பிடிப்பவர்கள் குறித்து கவனிக்க தவறியிருப்பது கவலையளிக்கிறது.

ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவி வரும் அசாதாரண சூழலால் வணிகப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, கடை வாடகை, வங்கி கடன் என பல்வேறு இன்னல்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும், மீண்டும் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பித்து கடைகளை திறக்க அனுமதி மறுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

எனவே தளர்வுகளற்ற ஊரடங்கில் சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் காலை 10மணி வரை கட்டுப்பாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு கடை வாடகையை ஈடு செய்யும் வகையில் கொரோனா நோய் தொற்று காரணமான தளர்வுகளற்ற ஊரடங்கு முடியும் வரை அவர்களுக்கு சிறப்பு நிதி வழங்கவும்,

கடைகளுக்கான மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கவும் தமிழக அரசு முன் வர வேண்டும்,

என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.