திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார்.
தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் கரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாகவும், அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்குவது தொடர்பாகவும், லயன்ஸ், ரோட்டரி ஆகிய சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி, மாநகர காவல் ஆணையர் ஏ.அருண், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில், அரசுத் துறை அதிகாரிகளைக் கட்சி அலுவலகத்துக்கு அழைத்து, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
எனவே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி.யும், அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான ப.குமார், நேற்று ஆளுநருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட்டம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும், திருச்சியில் உள்ள பொதுநல சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது அதிகாரிகள் தனக்கு வாழ்த்து தெரிவிக்கவே அங்கு வந்தனர் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், பாஜக வை சேர்ந்த காயத்தி ரகுராம், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 10 நாட்களில் மாவட்ட கலெக்டரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் கட்டாயப்படுத்தி தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கொரானா ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அதிகார துஷ்பிரயோகம் செய்து தவறான முன்னுதாரணம் ஏற்படுத்திய இவரை தமிழக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.