இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணம் நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் அவசர காரணங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டத்திற்கு உள்ளேயும் பயணம் செய்பவர்கள் இ-பதிவு பெற்று செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இ-பதிவு பெறுவதற்கு மருத்துவ சிகிச்சை, திருமணம், இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்த பின்னர் இ-பதிவிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால் அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உரிய ஆவணங்களுடன் இ-பதிவு முறையில் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.