கொரோனா 2-வது அலையில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?- அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இந்தியாவில் சூறாவளியாக அடித்துக் கொண்டிருக்கிறது. சற்று அஜாக்கிரதையாக இருக்கும் பொதுமக்களை வாரி சுரிட்டி எமனிடம் கொண்டு சேர்த்து விடுகிறது. தற்போதைய நிலையில் தினந்தோறும் 4 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாய கட்டத்தில் இந்தியா உள்ளது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றை விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்களும் உயிர்களை இழக்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
தற்போது 2-வது அலைக்கு இதுவரை 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மெடிக்கல் அசோசியேசன் தெரிவித்துள்ளது.
இதில் நேற்று மட்டும் 50 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பீகாரில் அதிகபட்சமாக 69 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 டாக்டர்களும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கியபோது 736 மருத்துவர்கள் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றுக்கு சுமார் 1000 டாக்டர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
அனாஸ் முஜாஹித் என்ற 26 வயது ஜூனியர் ரெசிடென்ட் டாக்டர் டெல்லியில் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்த சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளார்.