Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா பரவலைத் தடுக்க முக ஸ்டாலின் நடவடிக்கைக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு.

0

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், “இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழு ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூட்டத்தின் அறிவித்துள்ளன.

அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்போவதில்லை எனவும் நிவாரண பணிகளை முழு மனதுடன் செய்வதாகவும் உறுதியளித்துள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. சில மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றன. கடைசி நேரத்தில் நோயாளிகளை வெளியேற்றக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்:-

1) கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

2) நோய் தொற்று வேகமாக பரவி வரும் இக்கால கட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பொது கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

3) நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால் கள அளவில் அனைத்து கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு மக்களை அறிவுறுத்தி வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணியில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

4) நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க சட்டமன்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக்குழு அமைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

5) அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.