திருச்சி:
கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாளை (திங்கட்கிழமை) முதல் வரும் 24-ந் தேதி வரை 2 வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி நேற்று (சனி), இன்று (ஞாயிறு) ஆகிய 2 நாட்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும், நிறுவனங்களும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் டாஸ்மாக் கடைகளும் முழு ஊரடங்கு நாட்களில் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டால் 2 வாரகாலத்துக்கு சரக்குகள் கிடைக்காது என்பதால் திருச்சியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றும் இன்றும் விற்பனை களைகட்டியது.
மதுப்பிரியர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். ஒருசிலர் வீட்டில் இருந்து பைகளை எடுத்து வந்து மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர்.
திருச்சி புத்தூரில் உள்ள அயல்நாட்டு மதுபானங்கள் விற்கப்படும் (எலைட்) டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி கொண்டு தூக்க முடியாமல் தூக்கி சென்றதை பார்க்க முடிந்தது.
மேலும், பல்வேறு டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் விற்று தீர, தீர குடோனில் இருந்து சரக்குகள் வேன்களில் கொண்டு வரப்பட்டு கடைகளில் இறக்கப்பட்டன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் மாலை நேரத்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் திரண்டது. இதனால் அமோக விற்பனை நடைபெற்றது.
நேற்று மட்டும் திருச்சி மண்டலத்தில் 82.59 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.