திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் பாமாயிலை மொத்தமாக வாங்கி அவற்றை சிறிய 100 கிராம் முதல் ஒரு லிட்டர் வரையிலான பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை செய்து வந்தனர்.
அதனைக் கடைகளுக்கு விற்பனைக்குப் போட்டு வரும் தனியார் நிறுவனம்,
சில்வர் கோல்ட், சன்ஃபிளவர் ஆயில் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாக அனுமதி பெற்றுள்ளனர்.
சூரியகாந்தி எண்ணெய்யை மட்டும் விற்பனை செய்வதாக அனுமதி வாங்கிய நிறுவனம், கோல்டு வின்னர் நிறுவனத்தின் பாக்கெட்டுகளை அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக தயாரித்து, அதில் சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலை நிரப்பி சூரியகாந்தி எண்ணெய் என்று கூறி கடைகளில் விற்பனைக்கு போட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த எண்ணெய்ப் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் இடங்களில் இருந்து தொடர்ந்து பல புகாரின் பேரில் எண்ணெய்யில் தரம் இல்லை என்றும், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த எண்ணெய்யைப் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு அந்த எண்ணெய் நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டார்.
அப்போது அங்கு சூரியகாந்தி எண்ணெய் நிரப்பப்பட வேண்டிய பாக்கெட்டுகளில் பாமாயில் நிரப்பப்பட்டு பேக்கிங் செய்வதைக் கண்டு அனைத்து பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்த அவர், பேக்கிங் செய்ய வைத்திருந்த 5,400 லிட்டர் பாமாயிலையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கோல்டு வின்னர் நிறுவனத்தின் பெயரை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி சமைக்கும் சமையல் சூரியகாந்தி எண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலை பயன்படுத்தியதற்காக அதிகாரிகள் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அந்த நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.