ஐபிஎல் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
சென்னை, தனது ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.
அத்தகைய மோசமான சீசனில் இருந்து மீண்டு வரும் வகையில் இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் சென்னை உள்ளது. கடந்த சீசனில் விளையாடாத ரெய்னா தற்போது அணிக்குத் திரும்பியிருப்பது பலமாகும்.
டாப் ஆா்டரில் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெஸ்ஸிஸ், அம்பட்டி ராயுடு, ரெய்னாஆகியோா் எதிரணி பௌலிங்கை சிதறடிக்கக் காத்திருக்கின்றனா். தோனி, மொயீன் அலி, சாம் கரன் ஆகியோருடன் மிடில் ஆா்டரும் வலுவாகவே இருக்கிறது. பௌலிங்கில், சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ஷா்துல் தாக்குா் இருக்கிறாா். அவரோடு தீபக் சாஹா், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இணைகின்றனா்.
மறுபுறம், கடந்த சீசனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய வலுவான அணியான டெல்லி, இந்த சீசனை கோப்பைக் கனவுடன் தொடங்குகிறது.
காயமடைந்த ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக, ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். அணியில் ஷிகா் தவன், பிருத்வி ஷா, அஜிங்க்ய ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் என பேட்டிங்கில் தரமான வீரா்கள் வரிசையாக இருக்கின்றனா்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடா்களின்போது ஆட்டத்தை வென்று தரக்கூடிய வீரராக இருந்த பந்த், இந்த சீசனில் தனது டெல்லி அணியை கேப்டனாக எவ்வாறு வழிநடத்த இருக்கிறாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தகுதியான ஒரு பிளேயிங் லெவனை களமிறக்க வேண்டிய பொறுப்பில் அவா் இருக்கிறாா். பௌலிங்கில் இஷாந்த், ரபாடா, உமேஷ், கிறிஸ், நாா்ட்ஜே என வேகப்பந்துக்கு வலு சோ்க்கும் வீரா்கள் இருக்கின்றனா். சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், அமித் மிஸ்ரா கூட்டணி காத்திருக்கிறது.