Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 87 ஆண்டுகள் பழமையான சினிமா தியேட்டர் இடிப்பு .

0

திருச்சி ஜங்ஷனிலிருந்து பாலக்கரை வழியாக சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்லும் மதுரை சாலையில் மிகவும் பழமையான ராமகிருஷ்ணா சினிமா தியேட்டர் இயங்கிவந்தது. இந்த தியேட்டரின் காரணமாகவே அதன் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு ராமகிருஷ்ணா பாலம் என்ற பெயர் இன்றளவும் விளங்கி வருகிறது.

1934-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சினிமா தியேட்டரில் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 700. எம்.ஜி‌ஆர்., சிவாஜி படங்கள் பல இந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகி அதிக வசூல் பெற்றுள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் பாட்ஷா உள்ளிட்ட படங்களும் இங்கு பல நாட்கள் ஓடி சக்கை போடு போட்டு உள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சினிமா தியேட்டர்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்ட போது இந்த தியேட்டரும் மூடப்பட்டது. அதன் பின்னர் தியேட்டர்களை திறப்பதற்கு தளர்வு வழங்கிய பின்னரும் இதனை நடத்திவந்த குத்தகைதாரர் அதனை நடத்த முடியாமல் திணறினார். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தியேட்டர்களை திறப்பதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன..

இந்நிலையில் இந்த தியேட்டரை தொடர்ந்து நடத்த முடியாததால் அதனை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பாக அந்த தியேட்டரின் ஆரம்பகால உரிமையாளரான டாக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,

1934-ம் ஆண்டு எனது தந்தையார் இந்த தியேட்டரை கட்டினார். அந்த காலகட்டத்தில் மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டது. அதில் மீதமிருந்த கட்டுமான பொருட்களை கொண்டு இந்த தியேட்டரின் மேற்கூரை அமைத்ததாகவும் என் தந்தையார் கூறியது என் நினைவில் உள்ளது என்றார்.

காந்தி மார்க்கெட் மற்றும் மரக்கடை அருகில் இந்த தியேட்டர் இருப்பதால் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் என அடித்தட்டு மக்கள் இந்த தியேட்டரில் அதிகளவில் படம் பார்த்து மகிழ்ந்தனர். தியேட்டர் இடிக்கப்பட்டதால் அவர்களுக்கான பொழுதுபோக்கு வசதி இல்லாமல் போய் விட்டது.

Leave A Reply

Your email address will not be published.