Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர்.

0

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியுள்ளது.

இந்த சட்டங்களை 1½ ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கவும், இது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கவும் அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியும் விவசாயிகள் இதை ஏற்கவில்லை.

அந்தவகையில் மத்திய அரசு உடனான 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வேளாண் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தாங்கள் விரும்பிய விலையில், எந்த இடத்திலும் விற்பனை செய்யும் சுதந்திரம் வழங்கவும் இந்த சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும் சந்தையில் அதிக விலைகளை பெறக்கூடிய பயிர்களை வளர்க்கவும் இந்த சட்டங்கள் உதவும்.

ஆனால் இந்த போராட்டம் எப்படி விவசாயிகளுக்கு பலனளிக்கும் என தெரியவில்லை. இந்த போராட்டம் எப்படி விவசாயிகளுக்கு நலன் விளைவிக்கும் என்பதை விளக்க யாரும் தயார் இல்லை. ஜனநாயகத்தில் எதிர்ப்புக்கும், கருத்து வேறுபாட்டுக்கும் இடம் உண்டு. ஆனால் தேசத்துக்கு தீங்கு விளைவிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது.

ஜனநாயகத்தில் எந்தவொரு அரசியல் பார்வையையும் கொண்டிருக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது.

ஆனால் விவசாயிகளை தியாகம் செய்வதன் மூலமோ அல்லது விவசாயிகளின் நலனை புண்படுத்துவதன் மூலமோ அல்லது விவசாய பொருளாதாரத்தின் விலையிலோ ஏதாவது அரசியல் இருக்க வேண்டுமா? என்று புதிய தலைமுறை சிந்திக்க வேண்டும்.

விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது. விவசாயிகளை மதிப்பதில் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

எனவே வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.அதற்காக இந்த சட்டங்களில் குறைபாடு இருப்பதாக அர்த்தம் அல்ல. விவசாயிகள் தொடர்ந்து போராடுவதால், அவர்களின் உணர்வுகளை மதித்தே இந்த பரிந்துரையை அரசு கூறியுள்ளது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.