Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாய்களின் அட்டகாசம். பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள். நடவடிக்கை எடுக்குமா நீதித்துறை ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

0

'- Advertisement -

அதிகரித்து வரும் தெரு நாய்களின் அட்டகாசத்தால்

பாதிப்புக்குள்ளாகும் சிறார்கள்…

நடவடிக்கை எடுக்குமா நீதித்துறை ?

 

கால், தொடையில் கடித்து கவ்விய கறியை, நாய் உட்கொண்டதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெருகி வரும் தெருநாய்கள், அவற்றின் அட்டகாசங்களால், வாகன ஓட்டிகள், சிறார்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்து வருகிறது. திருச்சியில் அண்மையில் இருவருக்கு (சிறார்கள்) அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு நாய்கள் கடித்துக் குதறியிருப்பது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலையில் நாய் கடித்ததாலும், அடிபட்டதாலும் காயமடைந்த மணிகண்டன்.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் புளூ கிராஸ் உள்ளிட்டவைகளின் நடவடிக்கைகளால், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டமும், அவற்றை பிடித்து வனப்பகுதிகளில் கொண்டு விடும் பணிகளும் நடைபெற இயலாமல் முற்றிலுமாக கை விடப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பெரும்பாலான மாவட்டப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

தொடையில் கடிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள கார்த்திக்.

தெருநாய்கள், மற்றும் சாலைகளில் திரியும் ஆடுகள், மாடுகள், குதிரைகள் உள்ளிட்டவைகளால் சாலை விபத்துகள் நடப்பதும், நாய்கடிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதும் அனைவரும் அறிந்த விஷயம்தான்.

எனவே, இந்த பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுப்பதே மிக முக்கியம். ஆனால் அதை விடுத்து விலங்குகளுக்கான பாதுகாப்புகளை மட்டுமே முன்னிலைப் படுத்துவதும் ஒருவித நாகரீக கலாச்சாரமாக, விளம்பரப்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

விலங்குகள் பாதுகாப்பு சட்டம் தேவைதான் என்றாலும், விலங்குகளால் மனித உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொள்ளாமல், விலங்குகள் மட்டுமே பிரதானம் என்பதுபோல வெளிநாடுகளுக்கு இணையாக விலங்குகள் பாதுகாப்பு சட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது.
மனித இனத்துக்கு தொல்லை தராத விலங்குகளை கொல்வதையும், சித்ரவதை செய்வதையும் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட விலங்குகள் பாதுகாப்பு சட்டம், மனித இனத்துக்கே சவாலாக அமைந்திருப்பது பரிசீலனைக்கு உரியதாக உள்ளது. நாய்கள் உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடும் நிலையில், ஆட்சியாளர்களும், அலுவலர்களும், விலங்குகள் பாதுகாப்பு சட்டங்களுக்கு பயந்து நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே இவற்றுக்கு நீதிமன்றம்தான் தன்னிச்சையாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஏற்படுத்திய எழுச்சி போல, விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மற்றுமொரு எழுச்சி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

குறிப்பாக இதில் புளூ கிராஸ் அமைப்பின் செயல்பாடு மிக வேடிக்கையாக உள்ளது என்கின்றர். திருச்சியில் புளூ கிராஸ் என்ற அமைப்பை தொடர்புகொள்ள தொடர்பு எண்களோ அலுவகமோ, உறுப்பினர்களோ கிடையாது. ஆனால், அவ்வப்போது, மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுதுவது மட்டும் சிலரால் மறைமுகமாக தொடர்ந்து வருகின்றது.

தெரு நாய்கள் அதிகரிப்ப விஷயத்தில் இது, மிகவும் பொருந்தும். கடந்த பல ஆண்டுகளாகவே தெரு நாய்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறி வருவதற்கு புளூ கிராஸ் அமைப்பின் நடவடிக்கைகளே மூல காரணம். அந்த அமைப்பு, நீதிமன்றம் மூலம் மேற்கொள்ளும் தடை, போன்ற நடவடிக்கைகளால், தெரு நாய்களை கட்டுப்படுத்தவோ, அவற்றுக்கு கருத்தடை செய்யவோ மாநகராட்சியால் இயலவில்லை. கருத்தடை மையத்துக்கான மருத்துவர்கள் பணிக்கு வரவே தயங்கி, மாறுதலில் சென்று விடுகின்றனர். எனவே தெரு நாய்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

இதனால் சாலை விபத்துகள் அதிகரிப்பது மட்டுமின்றி, நாய்கடிக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
கடந்த 15 நாள்களில் மட்டும் திருச்சி மாநகரில் சாலைகளில் திரிந்த மாடுகளால் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் 10 க்கும் அதிகம். உயிரிழந்தவர் துப்பாக்கித் தொழிற்சாலை பணியாளரும் தொழிற்சங்க நிர்வாகியுமான முக்கிய பிரமுகர் ஒருவர்.

அதேபோல நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் தினசரி, சுமார் 5 பேருக்கும் அதிகமாக தடுப்பூசி போடப்படுகின்றது.

இது தவிர, திருச்சி கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இரு சிறார்களுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு நாய்கள் கடித்து குதறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகராட்சி 37 ஆவது வார்டு, கே கே நகர் ராஜமாணிக்கம் பிள்ளை நகரைச் சேர்ந்த நகாராஜ் (ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருபவர்) மகன் கார்த்திக் (10), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் மணிகண்டன் (9). இந்த இருவரும், அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணைத் தோட்டத்துக்கு வரும் தெரு நாய் கும்பலால் கடித்து குதறப்பட்டு, அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணிகண்டனுக்கு தலையிலும், கார்த்திக்குக்கு தொடையிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர்களின் பெற்றோர் கூறுகையில், இப்பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் திரிகின்றன. அருகில் உள்ள தோட்டத்துக்கு வரும் நாய்களுக்கு வேக வைக்காத இறைச்சியை போட்டு பழக்கப் படுத்தியுள்ளனர். இதனால் அங்கு வரும் நாய்கள் குழந்தைகளை கடித்து குதறி வருகின்றன என தெரிவித்துள்ளனர்.

நீதித்துறை நடவடிக்கை எடுக்குமா?:

தெரு நாய்களை பாதுகாக்க நீதி மன்ற தடை உத்தரவை மட்டுமே பெற்று அமல் படுத்தி வரும் புளூ கிராஸ் அமைப்பு, தெருவில் திரியும் நாய்களால் பாதிக்கப்படும் நபர்கள் குறித்து கவலை கொள்வதில்லை. மேலும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு தெருக்களில் கிடக்கும் நாய்களையும் புளூ கிராஸ் அமைப்பு பராமரிப்பதில்லை. தெரு நாய்கள் இறந்தாலும் அவற்றை அடக்கம் செய்யவும் முன் வருவதில்லை. எனவே நீதிமன்றம் இதில் தன்னிச்சையாக தலையிட்டு, தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை, புளூ கிராஸ் அமைப்பு அல்லது விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது பலரது ஆதங்கமாகவும் உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.