Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு என்னும் மையம் அமைப்பு.

0

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடைபெறும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 32 ஆயிரத்து 886. இவர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவுற்றதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு கருவிகளுடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

திருச்சி பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் திருவெறும்பூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் பாதுகாப்பு அறைகளில் கொண்டு சென்று சீல் வைக்கப்படும்.

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் லால்குடி, மண்ணச்சநல்லூர் தொகுதி வாக்கு பெட்டிகளும்,

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி கிழக்கு மற்றும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குப் பெட்டிகளும்,

துறையூர், முசிறி சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் துறையூர் இமயம் கல்லூரிக்கும் எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

கடந்த 2016 சட்டமன்ற பொது தேர்தலின்போது திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் மட்டும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நடைபெறவுள்ள தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்கள் அமையும் இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி எஸ்.சிவராசு ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.