திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி விரைவில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் தமிழ்நாடு ( COITU ) அறிவிப்பு.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் – தமிழ்நாடு COITU மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூரில் நடைபெற்றது.
இச்சங்கத்தின் தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களை எந்தவித முன் அறிவிப்பின்றி GVK EMRI நிர்வாகத்தின் சட்டவிரோத பணி நீக்கத்திற்கு எதிராகவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி வேலை நிறுத்தம் செய்வது எனவும், அதற்கான நாள் நேரம் மாநில காரியக் கமிட்டியில் முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும்,
108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஊதிய உயர்வு 20 சதவீதம் வழங்க வலியுறுத்தியும்,
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை தமிழக அரசே நிர்ணயித்து வழங்க வேண்டும் எனவும்,
தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வழங்கும் வருடாந்திர ஊதிய உயர்வை எந்தவித பிடித்தம் இன்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வழங்க வேண்டும் என்றும்,
108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை இரவு நேரங்களில் மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் இயக்காமல் நிறுத்தி வைத்து GVK EMRI நிறுவனம் சேவை விரோத செயலில் ஈடுபடுகிறது. இதனை தமிழக அரசிடமும் தமிழக மக்களுக்கும் அம்பலப்படுத்தி 108 ஆம்புலன்ஸ் சேவையை எந்தவித தங்கு தடையும் இன்றி இயக்கிட நடவடிக்கை மேற்கொள்வது எனவும்,
108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் FIXED TERM EMPLOYMENT முறையினால் ஏற்படும் சேவை பாதிப்பையும், தீமைகளையும் பொது மக்களிடம் எடுத்துரைத்து உயிர் காக்கும் நிரந்தரமான 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களின் அவசியத்தை உணர்ந்து FIXED TERM EMPLOYMENT முறையை கைவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது எனவும்,
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன்வைப்பது என்றும்
இதற்கு எதிராக போராட்டங்களில் பங்கேற்பது என்றும் ஆதரவு அளிப்பது என்றும் தேவைப்பட்டால் தேர்தலில் பங்கேற்று பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மூன்று மண்டல அறிக்கைகளும், மாநில நிதி நிலை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்திற்கு மதுரை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாவட்ட, மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.