அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் முதல் மாநாடு நேற்று திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட தலைவர் வில்பர்ட் எடிசன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ஆபிரகாம் தாஸ், செயலாளர் எட்வர்ட் நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜான் பிரபு வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் வி.அன்புராஜ், பொதுச்செயலாளர் ராபர்ட், பொருளாளர் சந்திரகுமார், துணைத்தலைவர் அருள் சாலமோன், கொள்கை பரப்புச் செயலாளர்கள் கலாநிதி, இளைஞரணி தலைவர் ஜோசுவா விக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திருச்சி மண்டல சி.எஸ்.ஐ. பேராயர் சந்திரசேகரன், திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு யூஜின் ஆகியோரும் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாநில தலைவர் அன்புராஜ் கூறியதாவது:-
கிறிஸ்தவர்கள் புனித தலமான ஜெருசலேம் சென்று வர வழங்கப்பட்ட சலுகைகளை அதிகரித்து வழங்க உத்தரவிட்ட அரசை பாராட்டுகிறோம். மேலும் கிறிஸ்தவ சமுதாயத்தின் குறைகளை மாவட்டம் தோறும் சென்று விசாரித்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் பாராட்டுகிறோம்.
கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதற்கு விதித்துள்ள கடுமையான விதிமுறைகளை தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு என்று தனி நலவாரியம் அமைத்து கொடுக்க வேண்டும். மதம் மாறுகிற தலித் கிறிஸ்தவர்களுக்கான அரசு சலுகைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தும் சமூகவிரோத கும்பலை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புராஜ்
தெரிவித்தார்.