திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயரை துளசி மாலையோ, வெற்றிலைமாலையோ சார்த்தி ஒன்பது வாரங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால்,
இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் காணாமல் போகும், தடைகள் அனைத்தும் விலகும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
திருச்சி மத்திய ரயில்வே ஸ்டேஷனை, ரயில்வே ஜங்ஷன் என அழைக்கப்படுகிறது. இந்த ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்புறத்தில் ரயில்வே குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில்தான் ஆஞ்சநேயர் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவர் ஆஞ்சநேயப் பெருமான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ரயில்வே குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த அனுமன் கோயிலுக்கு ரயில்வே ஊழியர்கள், வணிக கடை வைத்திருப்பவர்கள் என தினமும் காலையில் தரிசித்து விட்டுத்தான் வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
எந்தக் காரியமாக இருந்தாலும் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அனுமனை வழிபட்டுத்தான் முடிவு எடுக்கின்றனர் பக்தர்கள்.
திருச்சியின் பல பகுதிகளில் இருந்தும் புதன் கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் அனுமனை வாராவாரம் தரிசிப்பதையும், பிரார்த்தனை செய்துகொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர் பக்தர்கள்.
அனுமனுக்கு புதன் கிழமையும், சனிக்கிழமையும், வியாழக்கிழமையும் விசேஷமான நாட்கள் ஆகும்.
மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாளில், அனுமனை இங்கு வந்து தரிசிப்பதும் அனுமனுக்கு வெற்றிலைமாலை சாத்தி வேண்டிக்கொள்வதும், தொழில் இருந்த தடைகளையெல்லாம் தகர்க்கும் என்பது ஐதீகம்.
இங்கே மூலவர் சிறிதானவர்தான். ஆனால் அவரின் கீர்த்தியானது சொல்லில் அடங்காதது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இந்த அனுமனின் இன்னொரு சிறப்பு… மூலவரின் இடது திருப்பாதம் வடக்கு நோக்கி காணப்படுகிறது. வலது திருப்பாதம் கிழக்கு நோக்கி காணப்படுகிறது. இது காணக்கிடைக்காத அரிதான ஒன்று என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
அதேபோல், ஸ்ரீஆஞ்சநேயப் பெருமானின் இடது திருக்கரத்தில் பாரிஜாத மலர் அமைந்துள்ளது. வலது திருக்கரம் அபய ஹஸ்த முத்திரையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறது.
தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகள் கல்லுக்குழி அனுமனைத் தரிசித்து வந்தால், நினைத்த காரியம் நடந்தேறும் காரியத் தடைகள் அகலும். மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் விலகும். மனதில் உள்ள பயம் அனைத்தும் விலகி மனதில் புதியதொரு உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கும் என்பது ஐதீகம்.
சுமார் நூறு நூற்றுப்பத்து வருடங்களுக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷனில் பயணி ஒருவரை அதிகாரி பரிசோதித்தார். அதிக எடையுடன் கொண்ட மூட்டையை வைத்திருந்தார். ஆனால் அதற்கான கட்டணம் கட்டவில்லை. ஆகவே அதற்கு அபராதம் விதித்தார் அதிகாரி. ‘என்னிடம் பணம் இல்லை. பணத்தைக் கட்டிவிட்டு இந்த மூட்டையை வாங்கிக் கொள்கிறேன்’ என்று அந்தப் பயணி, அதிகாரியிடம் மூட்டையை வைத்துவிட்டுச் சென்றார்.
ஆனால் ஒருநாளானது. இரண்டு நாளானது. ஒருவாரம் கழிந்தது. இப்படியாக நாட்கள் கழிந்த நிலையில், பரிசோதகருக்கு ‘இந்த மூட்டையில் என்ன இருக்கிறது?’ என்று கேள்வி வந்தது. ‘அதைத் திறந்து பார்ப்போமே’ எனும் எண்ணம் மேலிட்டது.
ஒருநாள்… அந்த மூட்டையைத் திறந்து பார்த்த அதிகாரி, மூட்டையைத் திறந்ததும் வியந்து நெகிழ்ந்து மலைத்துப் போனார். அந்த மூட்டையில் அழகாகச் சிரித்துக் கொண்டு அபய ஹஸ்த முத்திரையுடன் இருந்தார் அனுமன்.
மூட்டைக்குள் அனுமன் சிலை என்ற தகவல் கிடைத்ததும் மொத்த ரயில்வே ஊழியர்களும் ஓடிவந்தனர். அனுமன் சிலையைச் சூழ்ந்துகொண்டனர்.
பிறகு எல்லோரும் முடிவு செய்து, ரயில்வே ஸ்டேஷனுக்கும் குடியிருப்புக்குமான நடுவழியில் குடியிருப்புப் பகுதியை ஒட்டி, அழகிய ஆலயம் அமைத்தனர். அனுமனைப் பிரதிஷ்டை செய்தனர்.
அன்று தொடங்கி இன்றளவும் வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள். ரயில்வே ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வழிபட்டு வந்ததை அடுத்து திருச்சியின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து அனுமனைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்கின்றனர்.