திருச்சி:திமுக மாநாட்டு பணிகள் தொடக்க விழாவில் நான் கலந்து கொள்ளாததில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது.பூஜை போடுவது நேருவின் சென்டிமென்ட்.அது கட்சி நிகழ்ச்சி இல்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை என்று எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திமுக 11வது மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனுர் அருகே நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இதில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்ளவில்லை.இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,
அதிமுகவை நிராகரிப்போம் என்று திமுக நடத்திய மக்கள் கிராம சபை நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 1,600 திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.இதுவரை ஒரு கோடி பேர் அதிமுகவை நிராகரிப்போம் என்று கையெழுத்திட்டுள்ளனர்.அதிமுகவை நிராகரிப்போம் என்று அவர்கள் கையெழுத்திட்டு இருப்பதன் மூலம் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.இந்த கிராமசபை கூட்டங்களில் ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை, சுடுகாட்டிற்கு வழியில்லை, குடியிருக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை போன்று அதிக அளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.இதேபோல் 2019ஆம் ஆண்டு திமுக சார்பில் ஊராட்சிகளில் திமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதில் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மீதமுள்ளவை நிறைவேற்றப்படவில்லை.அப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி தான் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற காரணமாக அமைந்தது.
இந்த வகையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் 156 இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் 16 இடங்களில் நேரடியாக நான் கலந்து கொண்டேன்.ஒவ்வொரு கூட்டத்திற்கும் 250 முதல் 300 பேர் சராசரியாக கலந்து கொண்டனர்.இந்த கூட்டங்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் ஆவணமாக தயாரிக்கப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்படும்.
அடுத்து திமுக ஆட்சி வந்த மூன்று மாத காலத்தில் இந்தத் கோரிக்கைகளில் முக்கியத்துவமும் அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
தற்போதும் இந்த கோரிக்கை ஆவணங்கள் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையரிடம் வழங்கப்படும்.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் இடத்தில் நான் போட்டியிட தயாராக உள்ளேன்.திமுக மாநாடு தொடக்க விழாவிற்கு என்னை அழைக்காத விஷயத்தில் எவ்வித அரசியலும் கிடையாது.பொதுவாக மாநாடு தொடங்குவதற்கு முன்பு பூஜை போடுவது முதன்மை செயலாளர் கே.என்.நேரு வின் சென்டிமென்டான விஷயம்.
மாநாடு பணிகள் தொடக்க விழா நடந்த பகுதியின் மாவட்ட செயலாளர், நேருவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் அவர் கலந்து கொண்டார்.அது கட்சி நிகழ்ச்சியில்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை.இதில் வேறு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது என்றார்..