தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:
செட்டியார்கள் தமிழகம் முழுவதும் உள்ள 23 தொகுதிகளிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். அரசு மற்றும் அரசியலில் செட்டியார்கள் மைனாரிட்டியாக இருக்கிறார்கள் என பிரித்தாளுகின்றனர். ஏறக்குறைய 85 வகையான உட்பிரிவுகளைக் கொண்ட செட்டியார் இனமானது ஒட்டுமொத்த தமிழக மக்கள் தொகையில் 2.5 கோடி பேர் இருக்கிறார்.கள்.
இந்த எண்ணிக்கையான செட்டியார் இன மக்கள் தமிழகத்தில் 120 சட்டமன்ற தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி வாய்ப்பினை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறோம். இருப்பினும் இதுவரை அரசியலில் ஒட்டுமொத்த செட்டியார்களை பிரித்தாளும் நிலையிலேயே இருப்பதால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் பிரதிநிதித்துவம் இதுவரை எங்களுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது.
எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு 20 சட்டமன்ற இடங்களை வழங்குகின்ற கட்சிக்கு ஆதரவளிப்போம்.
விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தமிழக எல்லைப்புற பகுதிகளில் புதிய அணைகளை தமிழக அரசு கட்ட வேண்டும். வங்கிகளில் வியாபார கடன் வழங்குவதில் 50 சதவீதம் பெண்களுக்கு கடன் வழங்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு மானிய கடன்கள் ஒதுக்கவேண்டும். சிறு வியாபாரிகள் நல வாரியத்தை அமைக்க வேண்டும். ஆன்லைன் வணிகத்தை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார்.