தமிழகத்தை பொருத்தவரை நான் செத்து போய்ட்டேன், இனி தமிழகம் பக்கமே வரமாட்டேன் என பிப்ரவரி மாதம் நித்யானந்தாவின் பகீர் பேச்சு டாக் ஆப் தி சிட்டியாக மாறியது.
2021ஆம் ஆண்டு பிறக்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் 2020-ஆம் ஆண்டு நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை அசைபோட்டு கொண்டிருக்கிறோம். அந்த வகையில் கைலாசா, கைலாசாவுக்கு தனிக் கொடி, கைலாசாவின் அதிபர், கைலாசாவுக்கு தனி பாஸ்போர்ட் , தனி கரென்சி என கலக்கி பெரும் பேசுபொருளாக ஆனவர் நித்யானந்தா.
இவர் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அதன் அருமை பெருமைகளை தினந்தோறும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கைலாசாவிற்கான பணிகள் முடிந்தன. 20 ஆண்டுகளாக போராடி இந்த கைலாசாவை கட்டியுள்ளேன். எனது மரணத்திற்கு பிறகு என் சொத்துகள் யாருக்கு என்பது குறித்து உயிலும் எழுதி வைத்து விட்டேன்.
வேறு யாருக்குமில்லை, தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, மதுரை, காஞ்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள குரு பரம்பரைகளுக்கு போய் சேரும். எனவே தமிழகத்திற்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்திற்கு இனி நான் வர போவதுமில்லை. தமிழக ஊடகங்களை பொருத்த வரை நான் செத்து போய்விட்டேன் என்று அர்த்தம்.
நான் இறந்தால் எனது உடலை கைலாசாவிலிருந்து பெங்களூர் பிடதியில்தான் அடக்கம் செய்ய வேண்டும். வாடிகனை போல இந்து மதத்திற்கு என ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக நான் வைத்திருந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டது என எப்போதும் காமெடி பேசும் நித்தி, அன்றைய தினம் உருக்கமாக பேசினார்.
கைலாசாவில் தொழில் தொடங்க அழைத்துள்ளார். அதிலும் காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதை வைத்துதான் மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிறுவனர் கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டிருந்தார். அது போல் திருச்சி துணிக்கடை உரிமையாளரும் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.